வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து தாக்குதல் நடத்தியமை மற்றும் அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கிறிஸ்தவ மதச்சபை ஒன்றின் போதகர் மற்றும் இருவர் அச்சுவேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரிய வெள்ளி தினமான நேற்றுமுன் தினம் மாலை இந்தச் சம்பவம் அச்சுவேலிப் பகுதியில் நடந்துள்ளது. அச்சுவேலிப் பகுதியிலுள்ள கிறிஸ்தவ மதச்சபை ஒன்றில் நேற்றுமுன்தினம் மாலை பெரிய வெள்ளி ஆராதனை நடந்துள்ளது.
அந்தப் பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பப்பட்டமை தொடர்பாக முன்னரும் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றுமுன்தினமும் அதிக ஒலி எழுப்பப்பட்டுள்ளது என்று அயலவர்கள் கூறுகின்றனர்.
இதன்போது தமது சபைக்குச் சொந்தமான தேவாலயத்தின் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்து, கையில் கொட்டன்களோடு குறித்த சபையின் போதகர், அவரது மகன் உள்ளிட்ட மூவர், அயலில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வங்கி அலுவலரின் கழுத்தை நெரித்ததோடு அவரது தாயாரையும் தாக்கினர் என்று அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய நேற்று போதகர் உட்பட மூவர் அச்சுவேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் பெண் என்று தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, கல் எறியப்பட்டதாலேயே அந்த வீட்டுக்குச் சென்றோம் என்று போதகரும் மற்றைய இருவரும் காவல்துறையினருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் போதகரும் ஏனைய இருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.