தாய்வானில் தேர்தல்கள் நடைபெறவுள்ள சூழலில் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் தலையீடு செய்யும் முயற்சிகளை சீனா முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி மாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் தாய்வானில் நடைபெற உள்ளன. இத்தேர்தல்களில் போட்டியிடும் சீன சார்பு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளை சீனா மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள தாய்வான் அதிகாரிகள், நூற்றுக்கணக்கான உள்ளூர் தாய்வான் அரசியல்வாதிகள் குறைந்த செலவில் சீனாவுக்கு பயணங்களை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதேவேளை கடந்த மாதத்தில் தாய்வானின் நீரிணைப்பகுதியிலும் கடற்பரப்பிலும் சீன படையினரின் நடமாட்டங்களும் ஆராய்ச்சி கப்பல்களின் பிரசன்னமும் அதிகரித்து காணப்பட்டன. இவை உண்மையான உளவியல் போரென தாய்வான் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
தாய்வான் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சில தினங்களுக்கு முன்னர் சீனாவின் 12 போர் விமானங்களும் வானிலை பலூனும் எம்மைக் கடந்து சென்றதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேசமயம் தாய்வான் ஜனாதிபதி தேர்தலில், சீனா டிக் டாக்கைப் பயன்படுத்தி அரசியல் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அந்நாட்டு இளைஞர் சமூகத்தை குறிவைத்து செய்யப்படுவதாகவும், தாய்வானில் உள்ள அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மீது அவநம்பிக்கையை பரப்புவதே இதன் நோக்கமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாய்வானில் தற்போதைய ஆளும் கட்சியை விமர்சிக்க சீன அரசாங்கம் TikTok ஐப் பயன்படுத்திவருவதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.