காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் போல் நடித்து அரசாங்க காணியை தருவதாக கூறி குருநாகல் ரிதிகம மற்றும் தொடம்கஸ்லந்த பிரதேச மக்களை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரிதிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் மாத்தளை மற்றும் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இவர்களில் இளம்பெண் ஒருவரும் உள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான ஒரு குழுவொன்று வானில் “காணி சீர்திருத்த ஆணையம்” என்ற ஸ்டிக்கர்கள் மற்றும் பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தியவாறு பயணித்து, பண மோசடி செய்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பில் காணி அமைச்சின் செயலாளர் புவனேகா ஹேரத்துக்கு அறிவித்தனர், இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சின் செயலாளர், இவர்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழு என்ற பெயரில் மோசடி செய்பவர்கள் என இனங்காணப்பட்டதுடன், இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ரிதிகம காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் காணி திணைக்களம் என எழுதப்பட்ட சட்டைகளை அணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கைது செய்யப்பட்ட ஒருவர் மாத்தளை விவசாய திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றும் அரச அதிகாரி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.