கசிப்பு விற்பனை மற்றும் சட்டவிரோத மது விற்பனை ஆகியவற்றை கல்லடி வேலூரில் இருந்து ஒழிக்க கோரி இன்று (29) மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூரில் தொடர்ச்சியாக 30 வருடங்களிற்கு மேலாக சட்டவிரோத மது விற்பனை இடம்பெற்றுவருவதாகவும் அதனை ஒழிக்க கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியானது கல்லடி வேலூரில் உள்ள கிராம உத்தியோகத்தரின் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு வந்தடைந்ததும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த இடத்திற்கு வருகை தந்த மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி, தீர்வை விரைவாக பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தமையினை தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக சென்ற ஆர்பாட்டக்காரர்கள், மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மதுவரி அத்தியட்சகரிடம் மகஜர் ஒன்றை கையளித்ததுடன், அத்தியட்சகரினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியினை தொடர்ந்து ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிறுத்து நிறுத்து கசிப்பை நிறுத்து, ஒழிப்போம் ஒழிப்போம் வடிசாராயத்தை ஒழிப்போம், வேண்டாம் வேண்டாம் உயிர்கொல்லி வடிசாராயம் வேண்டாம், அரசே இதற்கு தீர்வு தாரும், பிரதேச செயலாளரே தீர்வு வேண்டும் போன்ற வாசகங்களை ஏந்தி, கோசமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருளை ஒழிப்பதற்கு இலங்கையில் பொலிஸ் திணைக்களத்தினால் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://fb.watch/penZ4TYtrg/ (காணொளி)