உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர, தற்போதைய நிலவரப்படி இம்மாதம் 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்படாது என்றார். திட்டமிட்டபடி தபால் மூல வாக்களிப்பு நடைபெறாததாலும், ஏனைய தேவைகள் காரணமாகவும் ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஆஜராகாதமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் திறைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்படும் என்றார். மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.