ஓடாத குதிரைக்கு பந்தயம் கட்டும் செயற்பாட்டையே தமிழ் அரசியல் தலைவர்கள், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் செய்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (31.12.2023) இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இந்த காலகட்டத்தில் எல்லா கட்சிகளும் மத்தியிலும் அவர் ஜனாதிபதி வேட்பாளர் இவர் ஜனாதிபதி என்று பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எது எவ்வாறாக இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் காலங்கள் இருக்கின்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கும் இன்னமும் காலங்கள் இருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தல் காண காலங்கள் இருப்பதினால் அதற்கு கிட்டத்தட்ட 10 மாதங்கள் இருக்கின்றது. ஆகவே அது தொடர்பாக அரசாங்க தரப்பில் எது விதமான தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பதனை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
இந்த நாட்டை பற்றி உங்களுக்கு தெரியும் காலகாலமாக இனவாத போக்கோடு செயல்படுகின்ற ஒரு நாடு நிச்சயமாக தமிழ் வேட்பாளரை நிறுத்தி நாம் எதை சாதிக்க முடியும்.
முதலாவது எமது தமிழ் மக்கள் சார்பாக ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தி நாங்கள் ஜனாதிபதியாக அவரை கொண்டு வர முடியுமா என்பதனை சிந்திக்க வேண்டும்.
இரண்டாவது இப்போது உங்களுக்கு தெரியும் சில நேரங்களில் எமது தமிழ் தரப்புகள் விடுகின்ற பிழைகள் என்ன என்றால் யார் ஒரு ஜனாதிபதியின் தேர்தலில் தோற்பாரோ அவருக்கு ஆதரிப்பை வழங்குவது.
சாதாரண மக்களுக்கு விளங்கும் இவர் வெல்லுவார் இவர் தோற்பார் என்று தெரிந்தும் சிலருக்கு வாக்களிப்பார்கள்.
அதாவது ஓடாத குதிரைக்கு பந்தயம் கட்டுவது போன்று அவ்வாறானவர்களுக்கு ஆதரவினை வழங்கி கடைசியில் வெற்றி பெறும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி எதையும் செய்து கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு செல்வது வழமை என தெரிவித்துள்ளார்.