திருகோணமலை – வெருகல் படுகொலை சிவப்பு சித்திரை 19 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று மாலை கதிரவெளியில் உள்ள வெருகல் மலை மக்கள் பூங்காவில் நினைவு கூறப்பட்டது.
2004 சித்திரை மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற வெருகல் படுகொலையில் உயிர் நீத்த கட்சியின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து இவ் நினைவு நாளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வருடா வருடம் சிவப்பு சித்திரை என அனுஸ்டித்து வருகின்றனர்.
மேற்படி தினத்தில் அதிகாலை வேளையில் வெருகல் ஆற்றங்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கிழக்குப் போராளிகளை நினைவு கூறும் முகமாக இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி விசேட பூசை இடம்பெற்றதுடன் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ந்து மாலை 6 மணியளவில் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் மலர் தூவி அஞ்சலி செலுத்தி ஈகைச் சுடரும் ஏற்றப்பட்டது.
நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட கட்சியின் உப தலைவரும் முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினர் நா.திரவியம் பூ.பிரசாந்தன், கட்சியின் உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.