சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை மீறி செயற்படும் மின்சார சபையின் எந்தவொரு ஊழியரையும் பணி இடைநீக்கம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான பிரேரணை திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்து, சபையின் பதில் பொது முகாமையாளர் பொறியியலாளர் நரேந்திர டி சில்வாவினால் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக உள்ள நிலையில் அதன் ஊழியர்கள் தற்போது பணிப் புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான உத்தேச திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இன்று (03) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த சட்டமூலத்தை மீளப் பெறுமாறு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, தற்போது கொழும்பிலுள்ள இலங்கை மின்சார சபை தலைமையத்திற்கு முன்பாக அதன் ஊழியர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.