சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் உள்ள புகையிரத கடவை காவலர்கள் இன்று (04) முதல் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதியின் வடக்குக்கான விஜயத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று 4ஆம் திகதி காலை 6 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ள புகையிரத கடவை காவலர்கள் சங்கத்தின் தலைவர், அந்த நேரத்தில் பயணிகளை பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான அறிவித்தலை முல்லைத்தீவு ஊடக மையத்தில் நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளிப்படுத்திய புகையிரத கடவை காவலர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் ராஜ்குமார் தொடர்ந்து கூறுகையில்,
சரியான ஊதியமின்றி, கடந்த 11 வருடங்களாக நாடளாவிய ரீதியில் 2,064 தொழிலாளர்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் புகையிரத கடவை காவலர்களாக கடமையாற்றி வருகின்றனர்.
ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் கொடுப்பனவே கிடைக்கிறது.
பொலிஸாரின் அடிமைகளாக இருக்கும் எம்மை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்வரும் 4, 5, 6ஆம் திகதிகளில் வடபகுதிக்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கின்றோம்.
அத்தோடு, புகையிரத திணைக்களத்தின் கீழ் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்.
நாங்கள் வாழ்வதற்கான சரியான ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சரியான சம்பளம் வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தினார்.