இலங்கையின் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சூரிய மின்சார சக்தியில் செயற்படுகின்ற பாடசாலையாக மாற்றும் முயற்சியில் அந்தக் கல்லூரின் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஈடுபட்டுள்ளது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆரம்பமாகி 150 வருடங்கள் நிறைவை முன்னிட்டு கனடாவில் வசிக்கும் அக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சுமார் 3.2 மில்லியன் ரூபாய் செலவில் இந்த திட்டத்தினை செயற்படுத்தி உள்ளார்கள்.
இதன் ஊடாக, கிழக்கு மாகாணத்தில் சூரிய மின்சாரத்தில் செயற்படுகின்ற முதலாவது பாடசாலை என்கின்ற பெருமையை புனித மிக்கேல் கல்லூரி தனதாக்கிக் கொள்கிறது.
அதேசமயம் கிழக்கில் மேலும் பல பின்தங்கிய பாடசாலைகளுக்கும் தமது பழைய மாணவர் சங்கம் இதுபோன்ற சூரிய சக்தியில் மின்சாரம் பெறக்கூடிய வசதிகளை எதிர்காலத்தில் செய்ய உள்ளதாக மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் தலைவர் பிரசாட் ஜீவரெட்னம் தெரிவித்தார்.