இலங்கையில் 14000 க்கும் மேற்பட்ட பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மாகாணங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி இது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவில் புலப்பட்டது.
அத்துடன், இவற்றில் பெரும்பாலான பண்ணைகள் சிறிய அளவிலான பண்ணைகள் எனவும் பெரும்பாலான பண்ணைகள் கால்நடைகள் திருட்டு காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
கால்நடைகள் திருடப்படுவதால் சிறு விவசாயிகளின் மன உளைச்சலுக்கு ஆளாகி, பண்ணைகள் மூடப்படுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இதன்போது கோபா குழு சுட்டிக்காட்டியது.
கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்படுவதும், காணி தொடர்பான பிரச்சினைகளும் இதற்குக் காரணம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனவே, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெளிவான தரவுகளை சரியாகப் பராமரிக்க வேண்டும் என கோபா குழு சுட்டிக்காட்டியது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தை 2023 ஜூலை 06 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் அழைத்து வழங்கப்பட்ட பரிந்துரைகளின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் இந்தக் குழு பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மில்கோ நிறுவனத்திற்கு நாளாந்தம் கிடைக்கும் பால் அளவு வெகுவாக குறைந்துள்ளதாக அமைச்சர் இதன் போது அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கடந்த குழுக் கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்ட பால் உற்பத்தி தொடர்பான தேசிய கொள்கை தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.