கம்பஹாவில் வீடொன்றில் பதுங்கு குழியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வரும் பட்டா மஞ்சுவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் வீட்டில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தியதில் இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பட்டா மஞ்சு தற்போது வீரகுள பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு குற்றக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் விற்பனையாளருமான கணேமுல்ல சஞ்சீவாவின் முக்கிய ஆதரவாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனையிட்ட போது வீட்டில் ஒரு பெண்ணும், ஆண் ஒருவரும் இருந்துள்ளனர். வீட்டில் இருந்த பெண்ணின் கையடக்கத் தொலைபேசிகளை சோதனையிட்ட பின்னர், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் புழக்கத்தில் இருப்பதைக் கண்டறிந்த அதிகாரிகள் வீட்டை மேலும் சோதனை செய்தனர்.
இதன் போது பதுங்கு குழியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் 29 வயதுடைய கெஹெல்பெத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரான பெண் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் வலையமைப்பைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் போதைப்பொருள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.