இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கிளை வளாகத்தினை கண்டியில் திறப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த வளாகமானது இந்த ஆண்டின் (2024) இறுதிக்குள் இலங்கையின் கண்டியில் திறக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
“இந்திய தொழில்நுட்பக் கழகத்தினை வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இந்தப் புதிய வளாகத்திற்கான முன்மொழிவானது கடந்த ஆண்டின் (2023) நவம்பரில், 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது, கல்வி அமைச்சினால் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்கள் குழுவொன்றை இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த, வளாகத்தினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் இலங்கைக்கு இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து குழு வருவதற்கு முன்னதாக இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் மெட்ராஸ் குழுவானது இலங்கையின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கு அதன் பாடநெறிகளை கோடிட்டுக் காட்டும் அறிக்கையையு,ம் கண்டி கிளை வளாகத்தை நிறுவுவதற்கான செயல்முறையையும் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த ஆண்டு (2023) டிசம்பரில் இந்தியாவிற்கு விஜயம் செய்து இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இலங்கை வளாகத்தை அமைப்பது குறித்து கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அமைச்சர் பிரேமஜயந்த இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.