வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும் என தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள சந்தோஷ் ஜாவுக்கும், தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன .
குறித்த சந்திப்பானது, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.
இதன்போது அதிகார பரவலாக்கம், மீள் குடியேற்றம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முதலீடு மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
இலங்கையில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு நிதிப்பற்றாக்குறை உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டிய தமிழ் பிரதிநிதிகள், நாடு கடந்த காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்த போது நிதி வழங்கியிருந்தமையையும் நினைவு கூர்ந்தனர்.
அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் உறுதிப்பாடு மற்றும் இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கில், குறித்த மாகாணங்களில் மாத்திரம் மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்துவதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.
அதற்கான நிதியை வழங்கியாவது, அதனை நிறைவேற்றுவதற்கான உதவிகளை வழங்க வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகரிடத்தில், வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில், இந்திய மத்திய அரசுடன் கலந்துரையாடுவதாக தெரிவித்த, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இறுதியாக டெல்லிக்கான விஜயத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டிருந்த போது அது குறித்து உறுதியான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ராமர் பாலத்தை அமைப்பது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் நேற்றைய கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.