விரைவில் நகரமயப்படுத்தப்பட்டுவரும், மூலோபாய நகராக வளர்ச்சி கண்டுவரும் மாத்தறை நகரில் காணப்படும் குடிநீர் மற்றும் வெள்ளநீர் பிரச்சினை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களுடன் இணைந்து உலக வங்கியின் திட்டத்தின் நீட்சியாக திட்ட ஆய்வொன்றைத் தயாரித்து அதுபற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க இன்று (24) அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
நில்வளா கங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்த விடயம் தொடர்பில் ஆராயும் நோக்கில் பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழு இன்று (24) கூடியபோதே அதன் தலைவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.
2023 ஆண்டு நில்வளா கங்கையை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நில்வளா பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இயற்கையான நிலைமையா அல்லது அமைக்கப்பட்ட உப்பு நீர் தடுப்பு அணையினால் ஏற்பட்ட நிலைமையா என்பது குறித்து குழுவின் தலைவர் வினவினார்.
மக்களின் குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்ட உப்பு நீர் தடுப்பணை இந்த வெள்ள நிலைமைக்கு நேரடிக் காரணம் என்பது இங்கு தெரியவந்ததுடன், வெள்ளப்பெருக்குக் காரணமாக கடந்த வருடத்தில் ஏற்பட்ட பயிர்களுக்கான சேதம் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர், மாத்தறை மாவட்ட செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்தின் போது போடப்பட்ட தற்காலிக மாற்று வீதிகள் இதுவரை அகற்றப்படாமையும் வெள்ள நிலைமைக்கு வழிவகுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.