சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய வழிமுறையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளனர்.
பல வெளிநாட்டு தூதரகங்களும், அதிகாரிகளும் இலங்கையில் இல்லை, இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கை தொடர்பான கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்கள் தரகர்கள் மூலம் போலியான தகவல்களை வழங்கி போலி விசாவைத் தயாரித்து அவர்கள் மூலம் செல்வதாக தெரிய வந்துள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்ட மோல்டா வீசாவுடன் இந்தியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை இளைஞர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த மோசடி நடைமுறை அம்பலத்திற்கு வந்துள்ளது.