கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு நாவலடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், குறித்த மரணம் தொடர்பில் பல சர்ச்சைகள் உருவாகியுள்ளன.
இதன்படி, தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தாயார் நேற்று (29) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாவலடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் உருவாகி இருக்கின்றது.
குறித்த பெண் இரண்டு கணவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், 8 மாத காலமாக உயிரிழந்த நபருடனும் சொந்த கணவரோடும் வாழ்ந்து வந்ததாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்து பெண்ணின் நடவடிக்கை கிராம மக்களுக்கு தெரிய வந்ததையடுத்து, நாவலடி கிராம மக்கள் நேற்றைய தினம் (29) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து குறித்த பெண்ணையும் அவரது சொந்தக் கணவரையும் காத்தான்குடி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் (29) குறித்த பெண்ணின் வீட்டில் சில உடைமைகள் களவாடப்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் முறைப்பாடு ஒன்றும் சிலரினால் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று மாலை நாவலடி பொது மக்கள் காத்தான்குடி காவல் நிலைத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த பெண்ணின் நடவடிக்கை சம்பந்தமாக கிராமத்துக்கு அவபெயர் வரும் என்ற காரணத்தினால் குறித்த பெண்ணையும் கணவரையும் அந்த கிராமத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த பெண் காவல்துறையில் பொய்யான முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்து அப்பகுதியில் உள்ள இளைஞர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருப்பதாகவும் தங்களது முறைப்பாட்டை கூட பதிவு செய்யவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.
இதனை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு வருகை தந்த மரணமடைந்த நபரின் தாயார் தனது மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தனது மகனுக்கான நீதியான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சுமார் மூன்று மணி நேரங்களுக்கு மேலாக காவல்நிலையத்தில் காத்திருந்த கிராம மக்கள், கிராமம் சார்பாக ஒரு முறைப்பாடு ஒன்றினை எழுதி கையொப்பமிட்டு காத்தான்குடி காவல்துறையினரிடம் கையளித்ததன் பின்னர், அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் (30) காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறாக இருந்தாலும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டாரா தற்கொலை செய்து கொண்டார என்ற பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.