நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நடைமுறைக்கு வந்தவுடன் அனைத்து வெளிநாட்டு இணையசேவை வழங்குனர்களும் நாட்டிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படுமெனவும் அப்போது சீனாவைப் போன்று இலங்கையும் தனது சொந்த தளத்தை உருவாக்க வேண்டியிருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிகழ்நிலை காப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் “பேஸ்புக் மற்றும் எக்ஸ் போன்ற சர்வதேச சேவை வழங்குநர்களுக்கு இலங்கையை விட்டு வெளியேறுவது ஒரு சிறிய விடயம் ” என்று அவர் தெரிவித்தார்.
அனைத்து வெளிநாட்டு சேவை வழங்குனர்களும் இலங்கையில் செயற்படுவதை நிறுத்தினால், சீனாவைப் போன்று இலங்கையும் தனது சொந்த தளத்தை உருவாக்க வேண்டியிருக்கும்.
“உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள உங்கள் தொலைபேசி மூலம் Facebook, Instagram அல்லது X இல் உள்நுழைய முடியாவிட்டால் நீங்கள் எவ்வாறு உணருவீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்,” என்று அவர் அப்போது கேள்வி எழுப்பினார்.