வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைக்குட்பட்ட கும்புறுமூலை கிராமத்தில் உள்ள தோணாவில் காணப்பட்ட மீன்கள் திடிரென இறந்து காணப்படுவதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.
நேற்று திங்கள் கிழமை (29) மாலை முதல் இவ் அனர்த்தம் ஏற்பட்டு வருவதாகவும், இதன்போது தோணாவில் காணப்பட்ட கோல்டன்,செத்தல்,மணலை,கொடுவா போன்ற மீன்கள் இறந்து காணப்படுவதாக கவலை தெரிவித்தனர்.
குறித்த தோணாவில் உள்ள நீரில் நச்சுத்தன்மை கொண்ட இரசாயன பதார்த்தம் கலந்துள்ளமையினால் தான் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச வாசிகள் ஊகம் தெரிவிப்பதுடன், இவ்வாறான சம்பவம் இதுவரை காலமும் இப் பிரதேசத்தில் இடம்பெறவில்லையெனவும் சுட்டிக்காட்டினர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கண்டறிவதற்கு வாழைச்சேனை பொதுசுகாதார பரிசோதகர்கள்,கோறளைப்பற்று பிரதேச செயலக அனர்த்த முகாமை உத்தியோகத்தர்கள், கடல் தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்,கல்குடா பொலிசார் என்போர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.
பொலிசாரின் மேலதிக விசாரணைகளையடுத்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மேலதிக ஆய்விற்காக கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
அதேசமயம் அந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் உணவுக்காக மீன்கள் வாங்கு போது அவதானமாக செயற்படுமாறும் தெரிவிக்கப்படுகிறது.