மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கூட்டமானது நேற்று (01.02.24) நடைபெற்றுள்ளது.
பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இராசமாணிக்கம் சாணக்கியன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம், மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸார், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் முன்நெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், மக்களின் கோரிக்கைகள், தேவைகள் குறித்தும் அவற்றை நிவர்த்தி செய்து கொடுப்பது தொர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மிளகாய், வெங்காயம், வெண்டி, கத்தரி உள்ளிட்ட மேட்டுநிலப் பயிற்செய்கையாளர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்தோடு, குளங்களில் அச்சுறுத்தலாகவுள்ள முதலைகளைப் பிடித்தல், கடலில் மீன்கள் களவாடப்படுவதைக் கண்காணித்தல், கடற்கரையில் மணல் அகழ்வதைக் கண்காணித்தல், மற்றும், வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, விவசாயம், கால்நடை, விதி மின்விளக்குள், காணி, வீடமைப்பு, கரையோரம் பேணல், திண்மக்கழிவகற்றுதல், உள்ளிட்ட பல விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.