யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்ட சுதந்திரதின நிகழ்வில், அப்பாவிச் சிறுவர்கள் வாயில் கம்பியேற்றி சித்திரவதை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் கரிநாளாகக் கடைப்பிடித்தனர். அந்தக் கரிநாள் போராட்டத்தைக் குழப்பும் வகையில், வெளிமாவட்டங்களில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்து சமூகவிரோதியான அருண் சித்தார்த் என்பவரின் தலைமையில் சுதந்திரதினக் கொண்டாட்டத்தை யாழ்ப்ப்பாணத்தில் சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தியிருந்தனர். இனவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் இதில் கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிகழ்விலேயே , ஆரம்பத்தில் இடம்பெற்ற ஊர்வலத்தில் பதினைந்து வயதுக்குட்பட்ட சுமார் 10 சிறுவர்கள் காவடி என்ற பெயரில், புலனாய்வுப் பிரிவால் வாயில் கம்பிகள் ஏற்றப்பட்டு, கொளுத்தும் வெயிலில் ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு ஆடவைக்கப்பட்டு அழைத்துவரப்பட்டிருந்தனர். இத்தகைய சிறுவர் துஷ்பிரயோகத்தையும், சித்திரவதைகளையும் இந்த நிகழ்வுக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.