பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பையும் எழுச்சியையும் வெளிப்படுத்துவதற்காக இன்றையதினம் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை வடக்கு கிழக்கின் பெண்கள் வலையமைப்பினர் மேற்கொண்டனர். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக இலங்கை அரசினால் சர்வதேசத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை கேலிக்குள்ளாக்கி தற்போது கொண்டுவரவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
இவ்வாறு போராட்டத்தில் கலந்து கொண்ட மகளீர்கள் கருத்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது ஏன் எதிர்க்கப்பட வேண்டும்?
ஏனெனில் இந்த சட்டத்தில் பயங்கரவாதம் என்பதன் வரைவிலக்கணம் மக்களின் நியாயமான மனித உரிமைகளை தடை செய்யும் நோக்கோடு வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் நாட்டில் மக்கள் எவரும் சுதந்திரமான முறையில் ஒன்று கூடுதலும் கருத்து தெரிவிப்பதும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும் உரிமைகளுக்காக சட்ட ரீதியாக போராடுவதும், தொழில் சங்க நடவடிக்கைளில் ஈடுபடுவதும் கூட பயங்கரவாதம் என வரைவிலக்கணப்படுத்த முடியும்.
நீதித்துறை மேற்பார்வை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கும் அரச நிறைவேற்றுத்துறை அதிகாரிகளுக்கும் உச்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக நீதவானின் மேற்பார்வையின்றி தடுப்பு காவலுக்கான உத்தரவை நாட்டிலுள்ள எந்தவொரு பிரதி பொலிஸ்மா அதிபரும் வழங்க முடியும். எந்தவொரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகரும் நீதிமன்றத்திலிருந்து தடை உத்தரவுகளை பெற்றுக்கொள்ளமுடியும். பாராளுமன்ற மேற்பார்வையோ நீதித்துறை மேற்பார்வையோ இன்றி ஜனாதிபதிக்கு சட்டங்களை ஆக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை .
ஜனாதிபதி தனது நம்பிக்கையின் அடிப்படையில் எந்தவொரு அமைப்பினையும் தடைசெய்யக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை. பொலிஸார் அசையும் சொத்துக்களை தன்னிச்சையாக 3 நாட்களுக்கு கைப்பற்றி பின்னர் குறித்த தடுப்பினை 90 நாட்களுக்கு நீடிக்குமாறு நீதவானை கோர முடியும். எந்தவொரு நபரையும் குற்றவாளி என காண்பதற்கு முன்னரே புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்குரிய அதிகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கைது, மற்றும் தேடுதலுக்கு இராணுவத்தை பயன்படுத்த முடியும். மரண தண்டனை விதிப்பட முடியும். கடந்த காலத்தில் இலங்கை மக்கள் அனுப்பவித்துவரும் மனித உரிமை மீறல்களை இன்னும் பல அடங்கு அதிகரிக்கும் நோக்கத்தோடு பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றீடாக அதனை விட கொடிய சட்டத்தினை இலங்கை அரசாங்கம் முன்மொழிந்திருக்கின்றது.
ஏற்கனவேயுள்ள பயங்கரவாத தடை சட்டத்தினை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது மட்டுமன்றி ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின் முஸ்லிம் மக்கள் மீதும் இறுதியாக அரகலய மக்கள் எழுச்சியில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள், மதகுருமார்கள் மீதும் தனது கோர கரங்களின் பிடிக்களை இறுக்கியிருந்தது.
இச்சட்டமூலமானது சட்டமாக்கப்பட்டால் மக்கள் இலங்கையின் அரசியல் அமைப்பில் உத்தரவாதமளிக்கப்பட்ட தமது உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டு நிறைவேற்று அதிகாரமிக்க ஜானாதிபதியினதும் அவரது நிறைவேற்றுத்துறை அதிகாரிகளினதும் எதேச்சாதிபதமானமிக்க அரசின் சர்வாதிகார ஆட்சிக்குள் நசியவேண்டிய நிலை ஏற்படும். ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு காரணமான பயங்கரவாத தடை சட்டமானது இன்னொரு முகமூடியிலும் மேலும் பலம் கொண்டு வருவதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்திருந்தனர்.
அதேசமயம் புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பு மனித உரிமைகள் நிறுவனத்திடமும் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும்.
பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக உரிய ஏற்பாடுகளை ஏற்கனவே உள்ள சட்டங்களில் உட்புகுத்துவதை அல்லது சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு இசைவானதொரு சட்டத்தினை இயற்றுவதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
புதிய சட்டமானது மனித உரிமை நியமங்களுக்கும் சட்டங்களுக்கும் அமைவானதாக இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.