உறவுகளை தேடும் பயணத்திற்கு ஒரு உந்து சக்தியாக இருக்க வேண்டும். அதை விடுத்து தங்களுடைய பெயர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அல்லது தங்களை முன்னுரிமையாக காட்டுவதற்காக எம்மை அவமானப்படுத்தும் செயற்பாடுகளை யாரும் இறங்கக்கூடாது வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த நான்காம் திகதி இடம் பெற்ற கறுப்பு தின போராட்டத்தை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரும் சேர்ந்து வடக்குக் கிழக்கு தழுவிய போராட்டமாக நாங்கள் அதனை ஏற்பாடு செய்திருந்தோம்.
இந்த ஏற்பாட்டின் பிற்பாடு எங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எம்மை கஷ்டப்படுத்தி இலங்கை பொலிஸாரால் துரத்தி துரத்தி தடை உத்தரவுகள் தரப்பட்டது. அதனால் நாங்கள் அடுத்த கட்டமாக போராட்டத்தை நடத்துவதற்காக மதகுருமார்களை ஒழுங்குபடுத்தியிருந்தோம்.
முகநூலில் பார்க்கக் கூடியதாக இருந்தது கறுப்பு தின போராட்டம் ஆனது சாணக்கியனின் தலைமையில் இடம்பெற்றது என்று. இதனை மக்களுக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெளிவூட்ட வேண்டிய தேவை இருக்கின்றது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஆகிய நாங்கள் தனித்துவமாகவே எங்களது போராட்டங்களை செய்து வருகின்றோம். எங்களுடைய போராட்டம் ஒரு அமைப்பாகவோ அல்லது அரசியல் தலையிடும் இல்லாமல் நாங்கள் ஒரு சுயமான தாய்மாராக இணைந்து செய்த போராட்டம் தான் 2012 ஆம் ஆண்டில் இருந்து இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.
வடக்கு கிழக்கு இணைந்த ஒரு போராட்டமாக தாய்மார் ஆகிய நாங்கள் செய்து வருகின்றோம். அதற்காக நாங்கள் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும் நமது அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக எமக்கு நடந்த அநியாயங்களுக்கும் எமக்கு நடந்த காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் தமிழர்களுக்கு நடந்த இன அழிப்புக்குமான நீதி கோரும் போராட்டங்களை அடுத்து சந்ததிக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்தி இதனை கொண்டு போக வேண்டிய தேவை எங்களிடம் இருந்ததனால் தான் நாங்கள் தனித்துவமாக போராட்டத்தை செய்து மக்கள் மயப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துதான் நாங்கள் அனைவருக்கும் பொதுவான அழைப்பை விடுத்து நாங்கள் இந்த போராட்டங்களை செய்து வருகின்றோம்.
அந்த வகையில் எங்களுடைய போராட்டங்களை திசை திருப்புகின்ற வகையில் அரசியல்வாதிகள் கையில் எடுத்து செய்வதாக பல விமர்சனங்கள் கடந்த நான்காம் திகதி போராட்டத்தின் பிற்பாடு எனக்கு வந்திருந்தது. அதேபோன்று சில அமைப்புகளும் கையில் எடுத்து செய்வதாக விமர்சனங்கள் வருகின்றது ஆனால் இதனை உண்மையிலேயே ஏற்பாடு செய்தது பல்கலைக்கழக மாணவர்களும் வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமும் மாத்திரமே அதனை யாரும் உரிமை கோரமுடியாது.
நமது உணர்வுகளுடன் நமது உயிர்களுடன் விளையாடாமல் நமது உறவுகளை தேடும் பயணம் இது இந்தப் பயணத்திற்கு அனைவரும் ஒரு உந்து சக்தியாக இருக்க வேண்டும். அதை விடுத்து தங்களுடைய பெயர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அல்லது தங்களை முன்னுரிமையாக காட்டுவதற்காக எம்மை அவமானப்படுத்தும் செயற்பாடுகளை யாரும் இறங்கக்கூடாது என தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
உங்களுடைய பங்களிப்பும் உங்களுடைய ஆதரவும் எமக்கு தேவை இப்போது இருக்கின்ற நெருக்கடியான இந்த காலகட்டத்தில் நாங்கள் பலவீனமான பெண்களாகத்தான் இந்த இடத்தில் நிற்கின்றோம் எமக்கு எந்த ஆதரவும் இல்லாமல் தான் நாங்கள் நிற்கின்றோம் அதற்காகவே நாங்கள் உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.
அதேபோன்று வடக்கில் இருந்து வந்த வேலன் சுவாமி அவர்களை எனக்கு நீதிமன்ற தடை உத்தரவு கிடைக்கப் பெற்றதன் காரணமாக அவர் அதனை முன் கொண்டு செல்வார் என்பதற்காக என்னால் அவர் அழைக்கப்பட்டார் ஆனால் அவரை வடக்கில் சென்று பாருங்கள் என்று கதைத்ததை ஊடகங்கள் ஊடாக பார்த்தோம் இது ஒரு மன வேதனையாக இருந்தது நாங்கள் பாதிக்கப்பட்ட தாய்மார்களாக வடக்கும் கிழக்கும் இணைந்தே செயல்படுகின்றோம் கிழக்கில் ஒரு தாய்க்கு ஏதாவது பிரச்சினை என்றால் வடக்கில் இருக்கும் தாய்மார்கள் கொந்தளிக்கின்றார்கள் அதேபோலத்தான் வடக்கில் ஒரு தாய்க்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் கிழக்கில் இருக்கின்ற நாங்களும் கொந்தளிக்கின்றோம் ஏனென்றால் எங்கள் இருவருக்கும் ஒரே வலி, ஒரே இலக்கு இதனை வைத்துக் கொண்டே நாங்கள் பயணிக்கின்றோம்.
இதனை திசை திருப்பும் வகையில் எவரும் இதற்குள் வந்து குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் உங்களது தனிப்பட்ட கோபதாபங்கள் கட்சி சார்ந்த பிரச்சினைகள் எல்லாம் இருக்கட்டும் ஆனால் எங்களுடைய தாய்மார்களுடைய போராட்டத்தை எந்த விதத்திலும் கொச்சைப்படுத்தாது இது ஒரு வியாபாரமாக காட்டுவதற்கு சில நபர்கள் அரசியலுக்காக சில நபர்கள் இவ்வாறாக நினைத்து எமது தனித்துவமான போராட்டத்தை கலங்கப்படுத்த வேண்டாம் என்பதனை கேட்டுக் கொள்கின்றோம்.
இன்று 14 வருடங்களை கடந்த நிலையிலும் எங்களுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை நமது போராட்டத்தை நசுக்குவதற்கான செயற்பாடுகளை இலங்கை அரசு தத்ரூபமாக செயல்பட்டு வருகின்றார்கள் எமது போராட்டத்தை இல்லாமல் செய்வதற்காக எம்மை சரியான கெடுபிடிகளுக்குள் ஆளாக்கி எம்மை கஷ்டப்படுத்தி துன்பப்படுத்தி என்னவெல்லாம் அவர்களால் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு அவர்கள் செய்கின்றார்கள் கைது செய்கின்றார்கள் இவ்வாறான வேலைகளை செய்தும் இந்தப் போராட்டத்தை இல்லாமல் செய்வதற்காக முயற்சி எடுக்கின்றார்கள் ஆனால் நாங்கள் அதையும் தாண்டி இதற்குள் இருக்கின்றோம் என்றால் எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட கணவன்மார்களுக்கும் நமது பிள்ளைகளுக்கும் ஒரு நீதி கிடைக்க வேண்டும் நீதி கிடைக்கும் பட்சத்தில் அடுத்த கட்டமாக இது போன்ற அநீதிகள் அடுத்த சந்ததிகளுக்கு நடக்காது எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே இவ்வாறான போராட்டங்களில் நாங்கள் ஈடுபடுகின்றோம்.
இலங்கை அரசாங்கம் குற்றவாளிகள், குற்றம் செய்தவர்களிடம் நாங்கள் சென்று நீதி கேட்க முடியாது அதனால் தான் நாங்கள் சர்வதேசத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றோம் அதற்கு நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதனை தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றோம்.
ஒரு வியாபாரமாகவோ அல்லது அரசியல் மயப்படுத்தியோ நீங்கள் காட்ட வேண்டாம் உங்களுடைய ஆதரவுகள் நமக்கு தேவை நீங்கள் எமக்கு பக்கபலமாக பின்னால் இருக்க வேண்டும் அதையே நாங்கள் கூறினோம் நீங்கள் இதனை ஒழுங்கு படுத்தியதாக யாரும் எந்த ஊடகங்கள் ஊடாகவோ பொது இடங்களில் இவ்வாறான பிரச்சாரங்களை தவிர்ப்பது மிக நல்லது என்றார்.