மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலிருந்து காத்தான்குடி பிரதேசத்துக்கு பிக்கப் ரக வாகனமொன்றில் சட்டவிரோதமாக 6 மாடுகளைக் கடத்திய இரு சந்தேகநபர்களை காத்தான்குடியில் நேற்று முன்தினம் புதன்கிழமை (19) மாலை கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், வாகனத்துடன் அம் மாடுகளையும் மீட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காத்தான்குடி பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட அவர்கள், அவ்வீதியால் பயணித்த பிக்கப் ரக வாகனத்தை பின்தொடர்ந்து சென்று, அதை காத்தான்குடியில் மடக்கிப் பிடித்து சோதனையிட்ட போதே இச்சம்பவம்
தெரியவந்தது.
காத்தான்குடியைச் சேர்ந்த 35, 37 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டனர். அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச் சென்றமை , போலி ஆவணங்களைத் தயாரித்தமை, மாடுகளை சிறிய இடத்தில் அடைத்துவைத்து சித்திரவதை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களைக் கைது செய்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை
செய்து வருகின்றனர்.