ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிராமங்களில் உள்ள மக்களை வலுப்படுத்த வேண்டும் என்று அதற்கு தேவையான வேலை திட்டங்களை முன்னெடுக்க கூறியுள்ளார் அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கிராமிய ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணப்படும் இறால் பண்ணைகளை அமைப்பதற்காக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான அறிவுறுத்தும் கூட்டம் இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பட்டிப்பளை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு இடையிலாக ஒரு சங்கத்தினை கட்டி எழுப்ப வேண்டும் எனவும், இங்கு வழங்கப்படுகின்ற நிலத்தினை பயன்படுத்தி இறால் உற்பத்தினை செய்வதற்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவது தொடர்பாகவும், வழங்கப்படுகின்ற நிலங்களை பெற்றுக்கொண்டு இறால் உற்பத்தியை செய்யாமல் இருக்கக் கூடாது எனவும் உரிய முறையில் இறால் உற்பத்தினை மேற்கொண்டு பலன்களை அடைய வேண்டும் எனவும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன் இறால் பண்ணைகளை அமைப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை கிழக்கு மாகாணசபையின் நிதியுதவில் மேற்கொள்வதற்கும் இதன்போது பணிப்புரைகள் வழங்கப்பட்டன.
எதிர்பார்க்கின்ற வாரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணிகளை வழங்கும் விதமாக அந்த காணிகளை பகிர்ந்து அளிப்பதற்கும் நில அளவை திணைக்களுத்தினால் அளவீடுகள் செய்து உரிய முறையில் பகிர்ந்து அளிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சி.சுதாகர், கிழக்கு மாகாண மீன்பிடிக் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுதாகர், உதவி காணி ஆணையாளர் ஜனாப் முஸம்மில், உதவி பிரதேச செயலாளர் மேனகா, நெக்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்,
இரால் பண்ணையினை பகிர்ந்து அளிப்பது தொடர்பான விடயங்கள் ஆரம்பித்து ஏழு வருடங்கள் கடந்த நிலையில் ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இந்த விடயம் தொடர்பாக என்னிடம் கலந்துரையாடினார் இந்த இரால் பண்ணையினை சீரான முறையில் பண்ணையாளர்களுக்கு பகிர்ந்தழித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று.
இந்த விடயம் தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாக ஆளுநர் செயலகம் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இப்போது இந்த இடங்கள் பயனாளிகளுக்கு கையளிப்பது தொடர்பான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிராமங்களில் உள்ள மக்களை வலுப்படுத்த வேண்டும் என்று அதற்கு தேவையான வேலை திட்டங்களை முன்னெடுக்க கூறியுள்ளார் அந்த அடிப்படையில் இந்த வேலை திட்டம் இன்று ஆரம்பிக்க வைக்கப்பட்டுள்ளது.