பட்டை நம் உணவுகளில் ருசி மற்றும் மணத்தை கூட்டுவதற்காக பயன்படுத்துகிறோம். பட்டைகளில் உள்ள மருத்துவ குணம் காரணமாக பெரும்பாலான நாடுகளில் இது மருத்துவ ரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இதில் இலங்கையில் உற்பத்தியாகும் பட்டை தான் உண்மையான பட்டை என்றழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம்.
சிலோன் பட்டை
இலங்கையில் உற்பத்தி செய்யும் பட்டை, சிலோன் பட்டை என பரவலாக அறியப்படுகிறது. தொன்று தொட்டு இந்த வேலையை செய்யும் பல்வேறு குடும்பங்கள் இன்றும் இலங்கையில் இருக்கின்றனர். இனிப்பு சுவை மற்றும் மருத்துவ குணம் காரணமாக பல நூற்றாண்டுகளாகவே சிலோன் பட்டைகளுக்கு அதிக மதிப்பு இருந்து வந்துள்ளது.
தங்கத்தை விட மதிப்புமிக்க பட்டை
ஒரு காலத்தில் சிலோன் பட்டையின் மதிப்பு தங்கத்தை விட அதிகமாக இருந்தது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். பட்டை விநியோகத்தில் சுமார் 90 சதவீதம் இலங்கையில் இருந்து வருகிறது. இலங்கையில் கிடைக்கும் பட்டைகளுக்கு மேற்கத்திய நாடுகளில் பெரிய கேள்வி இருந்ததாம். எனவே இதனை வணிகம் செய்தவர்கள் பெரிய லாபம் அடைந்தார்களாம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், மேற்கத்திய நாடுகளில் சிலோன் பட்டையை உணவில் பயன்படுத்துவது மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்பட்டது என்றும் , அன்றைய கால கட்டத்தில் தங்கத்தை விட இதன் மதிப்பு அதிகமாக இருந்தது என்றும் கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
சிலோன் பட்டை வர்த்தகம்
உலகிலேயே மிகச்சிறந்த மற்றும் ருசி கொண்ட பட்டை என சிலோன் பட்டை அறியப்படுகிறது. பொதுவாக மழை காலமான ஜூன் முதல் டிசம்பர் மாதங்களில் தான் மரங்களில் இருந்து பட்டை எடுக்கப்படுகிறது. இதற்கு கைதேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே பணி அமர்த்தப்படுகின்றனர். குறிப்பிட்ட கோணத்தில் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளனவாம். மரங்களில் இருந்து வெட்டப்பட்ட கட்டைகள் 15 நிமிடங்களுக்கு நீரில் ஊற வைக்கப்பட்டு அதில் இருந்து பட்டை உறிக்கப்படுகிறது. பின்னர் தொழிலாளர்கள் அவற்றை தரம் பிரிக்கின்றனர். மிக லேசான பட்டைகள் அதிக தரம் கொண்டவை அதாவது அதன் விலை அதிகம் என பிரிக்கப்படுகிறது. பின்னர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சிலோன் பட்டைக்கு போட்டி
சிலோன் பட்டையின் விலை அதிகமாக இருக்கும் நிலையில், சந்தையில் தரம் குறைவான ஆனால் பெரும்பாலானவர்களால் வாங்கப்படும் பட்டைகள் விற்கப்படுகின்றன. அவை கேசியோ என்றழைக்கப்படுகின்றன. சீனா, இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரி இருந்தாலும் தரம், ருசி மற்றும் மருத்துவ குணங்களில் பெரும் வேறுபாடு இருக்கிறது. கேசியோ வகை மரப்பட்டைகள் அதிகம் உட்கொண்டால் உடலுக்கு தீங்கு என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சிலோன் பட்டைக்கு புவிசார் குறியீடு
இலங்கையின் விடா முயற்சி காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் சிலோன் பட்டைக்கு புவிசார் குறியீடு வழங்கியது. இலங்கையில் ஓராண்டுக்கு 22 மெட்ரிக் டன்கள் பட்டை உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் பாரம்பரியமாக இந்த தொழிலை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இதன் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.