அமெரிக்கக் கோடீஸ்வரர் எலன் மாஸ்க்கின் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தால்
தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது மிகப்பெரிய ஸ்டார்ஷிப் விண்வெளி ரொக்கெற்
அதன் சோதனைப் பறப்பின் போது வெடித்துச் சிதறியுள்ளது.
மனிதர்களைச் செவ்வாய்க் கோளுக்கு உல்லாசப் பயணம் அழைத்துச் செல்வதற்காக சுமார்
மூன்று பில்லியன் டொலர்கள் செலவில் வடிவமைக்கப்பட்ட அந்த ரொக்கெற் உலகின் சக்தி
வாய்ந்ததும் – மிக உயரமான நாற்பது மாடிக் கட்டடம் அளவுக்கு உயர்ந்த – முதலாவது விண்வெளி ஊர்தி ஆகும்.அமெரிக்காவின் ரெக்சாஸ் மாநிலத்தில் தெற்கு முனையில் மெக்ஸிக்கோ எல்லையோரம்- அமைந்துள்ள ஏவு தளத்தில் இருந்து விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட அது புறப்பட்டு நான்கு நிமிடங்களில் வானில் வெடித்தது.
உலகத்தைச் சுற்றிப் பறக்கின்ற பரீட்சார்த்த முயற்சியில் சுமார் 400 அடி நீளமான அந்த ராட்சத வடிவ ரொக்கெற்மனிதர்களையோ அன்றி செயற்கைக் கோள்களையோ சுமந்து செல்லவில்லை.
இந்த ரொக்கெட் மூலம் நிலவுக்கும் செவ்வாய்க் கிரகத்துக்கும் மனிதர்களை உல்லாசப்
பயணம் அனுப்புவதற்கு “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முதலாவது சோதனை முயற்சி தோல்வி அடைந்தாலும் தவறுகள் சரிசெய்யப்பட்டு
விரைவில் அடுத்த பறப்பு முயற்சி முன்னெடுக்கப்படும் என்று “ஸ்பேஸ்எக்ஸ்” நிறுவனத்தின்
அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ரெக்சாஸில் இருந்து ரொக் கெற் கிளம்பிய போது அதனை வழியனுப்பிவைப்பதற்காகக்
கூடியிருந்தவர்களிடையே எலன் மாஸ்க்கும் காணப்பட்டார். ரொக்கெற் வெடித்தபோதிலும்
அது வானில் பறந்த ஓரிரு நிமிடங்களும் ஒரு சாதனையே என்றும் அடுத்த பயணத்துக்கு அதில்
அனுபவங்களைக் கற்றுக் கொண்டோம் என்றும் அவர் தனது ருவீற்றர் செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார்.
ஸ்டார்ஷிப் ரொக்கெட் அதன் பரீட்சார்த்தப் பறப்பு முயற்சியில் தோல்வியடைவது இது
இரண்டாவது தடவை ஆகும். எது எவ்வாறாயினும் ரொக்கெற்றின் இன்றைய பறப்பு‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்துக்கு ஒரு பெரும் வெற்றியேஎன்று விண்வெளி அறிவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.