பொலன்னறுவை தலைமையக பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், ஜனாதிபதியின் தலைமை அதிகாரி மற்றும் அரச பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் கையொப்பத்தை போலியாக கையெழுத்திட்டு வடமத்திய மாகாணத்தில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு போலி ஆவணம் ஒன்றை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலன்னறுவையை சேர்ந்த ஐம்பத்தைந்து வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர் பொலிஸ் பரிசோதகர் சாகல ரத்நாயக்கவின் கையொப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி செயலக கடிதத் தலைப்பில் 12 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயர் பட்டியலை தயாரித்து வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதனோடு தொடர்பான விசாரணைகளை இரகசிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.