கொடுப்பனவுகள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த கொடுப்பனவு தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாளைய தினம் (20) சுகாதார அமைச்சருடன் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் எட்டப்படும் முடிவினை பொறுத்து பணிப்புறக்கணிப்பை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் முன்னதாக அறிவித்திருந்தன.
மேலதிக கொடுப்பனவுகளில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக கடந்த வாரம் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில் கடந்த செவ்வாய்கிழமை முதல் 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சுகாதார அமைச்சர் வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து, கடந்த புதன்கிழமை காலை முதல் குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தற்காலிகமாக கைவிட்டிருந்தது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டுமென குறித்த சுகாதார தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.