பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைக்க தயாராகும் திருமலை 13 வயது மைந்தன் ஹரிகரன் தன்வந்த்!
உலகத்தில் 50 பில்லியன் மக்களிடையே நீச்சல் மூலம் பாக்கு நீரிணையை கடந்து 06ஆவது இடத்தினை பெற வேண்டும் என்பதுதான் எனது எதிர்கால இலட்சியம் என ஹரிகரன் தன்வந்த் தெரிவித்தார்.
அத்தோடு, எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து அதிகாலை 12.05க்கு நீச்சலை ஆரம்பித்து, மதியம் தலைமன்னார் டியர் என்ற இடத்தில் நீச்சலை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (21) யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோதே ஹரிகரன் தன்வந்த் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
நீச்சலில் பாக்கு நீரிணையை கடந்து, இளைஞர்கள் மட்டத்தில் அதிகரித்துவரும் போதைவஸ்து பாவனையில் இருந்து மீள்வது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நீச்சல் முயற்சி காணப்படுகிறது.
கடற்பரப்பில் வெற்று பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை அகற்றி, கடற்பரப்பினை சுத்தமாக வைத்திருத்தல், விழிப்புணர்வினை ஏற்படுத்தல், ஆமை முதலான கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்தல், முருங்கற் பாறைகளின் முக்கியத்துவத்தை பேணுதல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நீச்சலில் ஈடுபடவுள்ளேன்.
நான் ஈ.சி.டி. திருகோணமலை இந்து கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்று வருகிறேன். கடந்த நான்கு வருடங்களாக நீச்சல் பயிற்சி பெற்று வருகிறேன் என்றார்.
அவரை தொடர்ந்து, தன்வந்த்தின் தந்தையாகிய ராஜகோன் ஹரிகரன் கூறுகையில்,
எனது மகன் மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட நீச்சல் போட்டியில் முதலிடங்களை பிடித்து விருதுகளை பெற்றுள்ளார். தேசிய ரீதியாக நீச்சல் போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.
தற்போது எனது மகன் உலக சாதனையினை முறியடிக்க இந்த முயற்சியினை எடுத்துள்ளார்.
31.05 கிலோ மீற்றர் கொண்ட கடற்பரப்பில் நீச்சல் சாதனை புரியவுள்ளார். கடந்த வாரங்களில் கொழும்பு கோட்சிற்றியில் இருந்து கல்கிசை கோட்சிற்றி வரை நீச்சல் பயிற்சிகளை பெற்றிருக்கிறார்.
மேலும், திருகோணமலை கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் தூரம் வரையான கடற்பரப்பில் நீச்சல் பயிற்சிகள் பெற்றுள்ளார்.
கடந்த வாரம் இலங்கை – இந்திய கடற்படையினரின் எல்லைக்கோடு வரை சென்று நீச்சல் பயிற்சியினை பெற்றுள்ளார்.
இந்த முயற்சியில் வெற்றி பெற்றால், உலகத்தில் முதல் முதலாக பாக்கு நீரிணையை கடந்த 13 வயது சிறுவனாகவும் காணப்படுவார். இதற்கு எடுக்கும் காலம் 09 மணித்தியாலங்கள் 54 நிமிடங்களாக காணப்படுகிறது.
உலகத்தில் 50 பில்லியன் மக்களிடையே நீச்சல் மூலம் பாக்கு நீரிணையை கடந்து 06ஆவது இடத்தை பெறவேண்டும் என்பதுதான் எனது இலக்கு என்றார்.
அதேசமயம் இலங்கை – இந்திய தேசங்களுக்கிடையிலான பிணைப்பை பலப்படுத்தும் பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கும் சாதனையை நிலைநாட்டும் பயணத்தை ஆரம்பித்துள்ள திருகோணமலையைச் சேர்ந்த செல்வன் ஹரிகரன் தன்வந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.