யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்ற கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க தீர்மானித்துள்ளனர்.
விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் வரவு பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக விசேட நிர்வாக கூட்டத்தில் (board meeting) கலந்துரையாடுவதற்கு விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று (21) மதியம் முதல் இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் தொடர்பாக, நேற்றுமுன்தினம் விஞ்ஞானபீட பீடாதிபதி மற்றும் துறைத் தலைவர்களுக்கு, விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தினரால் எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது.
அக்கடிதத்தில், நேற்று நண்பகலுக்குள் சாதகமான முடிவு கிடைக்காது விட்டால் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/image-574.png)
இந்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் விரிவுரைகளை துரிதப்படுத்தக் கோரி, வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதேசமயம் மாணவர்களது இந்த புறக்கணிக்கப்பட்ட கற்றல் செயற்பாடுகள் யாவும் தொடரப்பட்டுள்ளதா அல்லது நிறுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து மேலதிக தகவல்கள் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.