அன்னை பூபதி, தியாகி திலீபன், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை நாம் கைப்பற்ற வேண்டும். இந்த நினை வேந்தல்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும்தான் நினைவேந்த வேண்டும் என்று கூறியிருக்கிறார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர் காணலிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, அன்னை பூபதி அரசியல் காரணத்துக்காகவே உயிர்தியாகம் செய்தார். அவரின் சாவும் அரசியல் – அவரின் தியாகமும் அரசியல். அந்த அரசியலுக்கு நேர்மாறாக இருந்துகொண்டு, அன்னை பூபதியை நினைவு கூர்வதாக சொல்லிக்கொள்ளும் தரப்புகளுடன் நாம் சேர முடியாது.இதைப்போலவே திலீபனின் சாவும் அரசியல். திலீபனின் நினைவிடத்தில் நாம் யாரையும் அஞ்சலிக்க வேண்டாம் என்று தடுக்கவில்லை. அவர் உயிரிழந்த அந்த நேரத்தில் நாம் விளக்கேற்றிய பின்னர் ஏனையோரை அஞ்சலிக்குமாறு நாம் கூறினோம். ஆனால், அன்னை பூபதியின் நினைவு தினத்தில் பொதுக்கட்டமைப்பு என கூறிக்கொண்டு தாங்கள் மட்டும் தான் நினைவுகூரலாம் வேறு எவரும் நினைவு கூரக்கூடாது என்றார்கள். அன்று காலையில் அன்னை பூபதியை நினைவேந்த எந்த நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. மாலை 5 மணிக்கே அன்னை பூபதிக்கு நேர்மாறான கொள்கை கொண்டவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பொதுக் கட்டமைப்புகள் என்று சொல்பவர்கள் ஈழத்தமிழர்களுக்கு இந்திய அமைதிப் படை காலத்திலும் – இந்தியாவாலும் மேற்கொள்ளப்பட்டவற்றை மூடி மறைப்பதற்காக வந்தவை. அன்னைபூபதி நினைவேந்தலை தடுத்த பொதுக் கட்டமைப்பை சேர்ந்த சீலன் என்பவர் சொல்கிறார் 13ஆம் திருத்தத்தை நீங்கள் மட்டும்தான் எதிர்க்கிறீர்கள் என்று சொன்னார். இதுவரை நாம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பிழைக்கவில்லை – சிலநேரம் நாம் முன் வைத்த குற்றச்சாட்டுகளை விளங்கிக் கொள்ள மக்களுக்கு சிறிது நேரம் எடுக்கும். ஆனால், பிழைக்கவில்லை.திலீபன் அண்ணன் இந்திய அமைதிப் படைக்கும் இந்திய அரசுக்கு எதிராகவும் உயிரைத் தியாகம் செய்ய வேண்டி வந்தது. அதேமாதிரியான நிலைமையே அன்னை பூபதிக்கும் நடக்கிறது. ஆகவே, அந்த இரண்டையும் கைப்பற்றவேண்டும். முள்ளிவாய்க்கால் நினைவையும் கைப்பற்ற வேண்டும். ஏன்? 13ஆம் திருத்தத்தை நிராகரித்ததால்தான் போராட்டம் தொடர்ந்து நடந்தது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒற்றையாட்சியையும் 13ஆம் திருத்தத்தையும் நிராகரிக்கின்ற ஒரு நிகழ்வாக அடையாளப்படுத்தக்கூடாது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும்தான் இந்த நினை வேந்தல்களை நினைவுகூர வேண்டும். தமிழர்களின் சரித்திரத்தை சிங்களவர்கள் மாத்திரம் மாற்றியமைக்கவில்லை. இந்தியாவுக்கு முகவர்களாக இயங்குவோரும், இலங்கை அரசின் முகவர்களும் மாற்றியமைகின்றனர் – என்றும் அவர் கூறினார்.