சர்வதேச பௌத்த மகாநாடு கடந்த 20, 21ஆம் திகதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் புதுடில்லியில் இடம்பெற்றது. ‘தற்கால சவால்களுக்கான பதில் : தத்துவமும் நடைமுறையும்’ என்னும் தலைப்பில் மேற்படி மகாநாடு இடம்பெற்றது. புத்தரின் சிந்தனைகளை முன்கொண்டு செல்வதில் இந்தியா அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
நரேந்திர மோடி இலங்கைக்கு வந்தபோது பௌத்த மதத் துறவிகளுக்கு பெரும் கௌரவமளித்திருந்தார். அவர்களின் காலில் விழுந்து வணங்கியிருந்தார். இந்து மதத் துறவிகளுக்கு வழங்கும் கௌரவத்தை பௌத்த பிக்குகளுக்கு வழங்கியிருந்தார். ஆனால், மோடியின் அணுகு முறைக்கு பின்னாலுள்ள உண்மையான விடயம் வேறு. அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக உள்நாட்டுக்குள் இந்துத்துவா தேசியவாதத்தை உச்சமாக கையாளும் அணுகுமுறையையே பா. ஜ. க. தலைமையிலான அரசாங்கம் கையாண்டு வருகின்றது. அதே வேளை, இந்தியாவின் அயல்நாடுகளை கையாளும் வெளிவிவகார அணுகு முறையில் பௌத்தத்தை ஒரு துருப்புச் சீட்டாக மோடி அரசாங்கம் கைக்கொள்ள முற்படுகின்றது. அதாவது, பா. ஜ. க. இந்தியாவைப் பொறுத்தவரையில் பௌத்தம் ஒரு மென் இராஜதந்திர கருவியாக இருக்கின்றது. இதன் மூலம் நேபாளம், இலங்கை போன்ற நாடுகளை கையாள முடியுமென்று மோடி இந்தியா கருதுவதாகத் தெரிகின்றது.
இது நடைமுறையில் எந்தளவு வெற்றிகரமானதென்னும் கேள்விகள் இருந்தாலும்கூட பா. ஜ. க. இந்தியா இதனை ஒரு கருவியாகக் கையாளும் கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றதென்பது வெள்ளிடைமலை. ஆனால், இலங்கையின் சிங்கள – பௌத்தர்கள் புத்தரின் போதனைக்கு ஏற்ப இல்லையென்பதுதான் உண்மை. இந்த விடயம் தொடர்பில் பா. ஜ. க. கரிசனை கொள்கின்றதா? வடக்கு, கிழக்கில் இந்துத்துவா அணுகுமுறையை கைக்கொள்ள முடியுமென்று நம்பும் ஈழத்து சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் இந்த உண்மையை எந்தளவுக்கு பா. ஜ. கவின் தலைவர்களின் கரிசனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றார்கள்? யாழ்ப்பாணத்துக்கு வந்து செல்லும் பா. ஜ. கவின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை எந்தளவுக்கு இந்த விடயங்களைப் புரிந்துவைத்திருக்கின்றார்?
அண்மையில், தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த கிறிஸ்தவ மதப் பிரசார குழுவினரை தடுத்து நிறுத்தியதை ஆர். எஸ். எஸ். அமைப்பின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘ஓகனைசர்’ பாரட்டியிருக்கின்றது. ஆனால், மறுபுறம் வடக்கு – கிழக்கிலுள்ள இந்துக் கோவில்களின் பாதுகாப்பு மற்றும் உயர்ச்சி தொடர்பில் இந்துத்துவா தரப்புகள் பிரதான கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
அவ்வாறாயின், ஈழத்து இந்துக்களையும் இலங்கையின் சிங்கள – பௌத்தர்களையும் ஒரேமாதிரியாகவே பா. ஜ. க. நோக்குகின்றதா? ஏனெனில், இந்துக் கோவில்கள்தொடர்பில் அண்ணாமலை போன்றவர்கள் பிரத்தியேக கவனம் செலுத்தியதற்கு சான்றில்லை. வெறுமனே கிறிஸ்தவ மதமாற்றிகளை இலக்கு வைத்து செயல்படுவதன் மூலம் மட்டும் இந்துக்களின் இருப்பை பாதுகாத்துவிட முடியுமா?
வடக்கு – கிழக்கைப் பொறுத்தவரையில், இந்துக்களின் பாரம்பரிய இடங்களை பாதுகாப்பதென்பது தமிழ் மக்களின் இருப்புடன் தொடர்பு பட்டது. தமிழ் மக்களின் இருப்பையும் இந்துக்களின் அடையாளங்களையும் பிரித்து நோக்க முடியாது. வடக்கு – கிழக்கின் தொல்பொருள் சான்றுகள் என்பது, அடிப்படையில் இந்துக்களின்வாழ்வியலோடு தொடர்புபட்ட ஒன்றுதான். இதனை சிலர் சைவமென்றும் அடையாளப்படுத்திக் கொண்டாலும்கூட உலகளாவிய கண்ணோட்டத்தில் இந்துக்கள் என்னும் அடையாளத்தின் ஊடாகவே ஈழத்தின் பெரும்பான்மையான தமிழ் மக்கள் நோக்கப்படுவர். இந்துக்கள் விடயத்தில் இந்தியாவின் பிரதான கரிசனையை ஈர்க்க முடியாவிட்டால் இந்துத்துவா அணுகுமுறைக்கான நியாயம் பலவீனமான ஒன்றாகவே நோக்கப்படும்.