இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் இன்று(26) தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள், இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த கடந்த 17 ஆம் திகதி முதல் 10 நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/image-687.png)
இந்நிலையில் குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை மீளப் பெற்றுக் கொண்ட இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள், இன்று(26) மீண்டும் கடற்றொழில் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் 10 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட மீன்பிடி துறைமுகம் இன்று மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்ட பகுதிக்கு நேற்று(25) மாலை வருகை தந்த இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததுள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/02/image-688.png)
மேலும், விரைவில் தமிழக முதல்வரை கடற்றொழிலாளர்கள் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததையடுத்து கடற்றொழிலாளர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டம் மற்றும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக மீள பெற்றுள்ளனர்.
இதனைதொடர்ந்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தை மீள பெற்று இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.