இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது, மன்னார் இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சட்ட விரோதமான பொருட்கள் நாட்டுக்குள் வருவதை தடுக்கும் நோக்கில் கரையோர மற்றும் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வழமையான நடவடிக்கைகளின்போதே இந்த கடத்தல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS புவனேகாவினால் இலுப்பைக்கடவை தடாகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) உதவியுடன் நேற்று (28) இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது, கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அருகே உள்ள புதர்களில் சந்தேகத்துக்கிடமான பெட்டியை மீட்டுள்ளனர். அதில் 53 ஆயிரம் போதை மாத்திரைகள் இருந்துள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட போதை மாத்திரைகள் சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.