அமெரிக்காவில் மேற்படிப்புக்காக செல்லும் இந்திய மாணவர்கள் தொடங்கி, அங்கு வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் என இந்தியர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகிவருகின்றன.
அந்த வரிசையில், அமெரிக்காவில் வசித்து வந்த கொல்கத்தாவை சேர்ந்த 34 வயதான பரத நாட்டியக் கலைஞர் அமர்நாத் கோஷ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிசௌரியில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு பயில்வதற்காக, கடந்தாண்டு அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார் கோஷ்.
இந்நிலையில், அமெரிக்காவின் மிசௌரியில் உள்ள செயிண்ட் லூயிஸ் பயிலரங்கம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வேளையில், அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த அமர்நாத் கோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்திய நடனக் கலைஞர் மீதான துப்பாக்கிச்சூடு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழந்த அமர்நாத் கோஷின் குடும்பத்தினருக்கு அனைத்து விதத்திலும் உதவ தயாராக இருப்பதாகவும், இந்த கொலை வழக்கு தொடர்பாக பொலிஸார் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தீவிர விசாரணை நடத்த கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.