இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகம் நடாத்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் ‘ஸிஹாஹ் ஸித்தா’ கிரந்தங்களின் (தமிழ்) மொழிபெயர்ப்புத் தொகுதி அறிமுகமும், ‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ (தமிழ்) நூல் வெளியீடும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது தலைமையில் நேற்று 2024.03.03 ஆம் திகதி பல்கலைக்கழக கலை கலாச்சார கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சர்வதேசப் புகழ் ஒலிபரப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீட் அவர்களது நெறியாள்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்களும் தலைமையுரையை உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரும், சிறப்புரைகளை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர், இந்திய சென்னை மந்தைவெளி ஈத்கா மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா கே.எம். இல்யாஸ் ரியாஜி, இந்திய புதுப்பேட்டை மஸ்ஜிதே மஹ்மூதின் தலைமை இமாம் ஹாபிழ் ஏ. பீர்முகம்மது பாகவி ஆகியோரும் ஆற்றினர்.
நிகழ்வில் ரஹ்மத் பதிப்பகத்தின் நிறுவனர் எம்.ஏ முஸ்தபா அவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களுக்கு நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்றை வழங்கி அறிமுகம் செய்து வைத்தார். அதேவேளை இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிபீடத்துக்கும் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்துக்கும் நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன இதனை நூலகர் எம்.எம்.றிபாவுடீன் பெற்றுக்கொண்டார்.
நூலின் முதல் பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி அவர்கள் பெற்றுக் கொண்டதுடன் அதிதிகளும் எம்.ஏ. முஸ்தபா அவர்களிடமிருந்து பிரதிகளை பெற்றுக்கொண்டனர். ரஹ்மத் பதிப்பகத்தின் நிறுவனர் எம்.ஏ முஸ்தபா அவர்கள் அதிதிகளுக்கு பொன்னாடைகள் போற்றியும் கௌரவித்தார்.
நிகழ்வில் நன்றியுரையை ஏற்பாட்டாளரும் சிரேஷ்ட பேராசிரியருமான றமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்வின்போது பீடாதிபதிகள், பதில் பதிவாளர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், நிறைவேற்றுதர உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் பேராசிரியர் எஸ்.எம். ஐயூப் ஆகியோர் நட்பு நிமித்தம் அதிதிகளுக்கு நூல்களையும் வழங்கி வந்ததமை குறிப்பிடத்தக்கது.