இந்திய நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள சிவன் கோவிலில் உயிருள்ள யானைக்கு பதிலாக ரோபோ யானை வைத்து பூஜைகள் நடத்தப்படுகின்றன. யானைகளை பாதுகாப்பதற்கான முயற்சியாக அறிமுகமாகியுள்ள இந்த ரோபோ யானை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த கோவிலில் ரோபோ யானை அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னணி என்ன? அந்த ரோபோ யானை கோவிலில் என்னவெல்லாம் செய்கிறது? விரிவாகப் பார்க்கலாம்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை சிவன் கோவிலில், ரோபோ யானை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கே உயிருள்ள யானைக்குப் பதிலாக இந்த ரோபோ யானையை முன்னிறுத்தியே பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட கனடாவில் வசிக்கும் சங்கீதா என்பவர், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த ரோபோ யானையை கோவிலுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
பார்ப்பதற்கு உயிருள்ள யானை போல் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த யானையின் காதுகளும், கண்களும் அசைகின்றன. வால் அசைவதுடன், தும்பிக்கையை மடக்கி நீரையும் இந்த ரோபோ யானை பீய்ச்சி அடிக்கிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் வியப்புடன் பார்ப்பதுடன், ரோபோ யானையை தொட்டும் வணங்குகின்றனர். சிறுவர்கள் பயம் கலந்த மகிழ்ச்சியுடன் யானையை தொட்டுப் பார்க்கின்றனர். பலரும் ஆர்வமிகுதியில் ரோபோ யானையுடன் செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
கோவிலில் உயிருள்ள யானைகளை வைத்து என்னென்ன பூஜைகள் செய்யப்படுமோ, அவை அனைத்தும் இந்த ரோபோ யானையை வைத்தும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இரும்பு மற்றும் பைபர் கொண்டு, 900 கிலோவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ யானைக்கு, ஹரிஹரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்த சங்கீதா, ‘‘இந்த நவீன காலத்திலும் நாம் ஏன் யானைகளை துன்புறுத்த வேண்டும்? என நான் நினைத்த போது தான் உயிருள்ள யானைக்கு பதிலாக ரோபோ யானையை வழங்கலாமே என்று தோன்றியது. யானைகளை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கலாசாரம் விட்டுப்போகாமல் வழிபாட்டை பின்பற்றவும், தேவர்சோலை சிவன் கோவிலுக்கு ரோபோ யானை பரிசளித்தேன்,’’ என்றார்.