பேய் பிடித்ததாக கூறப்பட்ட பெண்ணை, தனது அசுர சக்தியால் குணமாக்குவதாக குறிப்பிட்டு, அவரது வீட்டுக்கு சென்று, குறித்த பெண்ணின் 14 வயதான மகளை பலமுறை பலாத்காரம் செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 38 வயதுடைய மந்திரவாதிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலாலே 60 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த சிறைத்தண்டனையை அவர் 20 வருடங்களில் அனுபவிப்பார்.
சட்டமா அதிபரால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அநுர திசா வெல்கம மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, அவருக்கு தனித்தனியாக 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் ரூ. 60,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த மந்திரவாதி ஒருமுறை நோய்வாய்ப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்து தனி ஒரு அறையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். அந்த அறையில் குறிப்பிட்ட நேரம் நோய்வாய்ப்பட்ட பெண் உட்கார வேண்டுமென மந்திரவாதி குறிப்பிட்டுள்ளார். இந்த சமயத்தில் மந்திரவாதி அறையிலிருந்து வெளியே வந்து, மற்றொரு அறைக்குள் வைத்து, நோய்வாய்ப்பட்ட பெண்ணின் 14 வயதான மகளை மிரட்டி பாலுறவு கொண்டுள்ளார்.
தாயாரை காப்பாற்றும் சிகிச்சைக்காக தாம் உடலுறவு கொள்ள வேண்டும், தாயாரை பிடித்த பேயை திருப்திப்படுத்த தன்னுடன் உடலுறவு கொள்ள வேண்டுமென்று கூறி உடலுறவு கொண்டுள்ளதுடன், இந்த சம்பவத்தை மற்றவர்களிடம் சொன்னால், தாயார் இறந்து விடுவார் எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக சிறுமி பல முறை மிரட்டி பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
1.1.2013 முதல் 2013.11.30 வரை இடம்பெற்ற மேற்படி குற்றம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், சட்டமா அதிபர் இந்த வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் (05) வழங்கப்பட்டது.
மூன்று குற்றச்சாட்டுக்களிலும் பிரதிவாதி குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டியதன் பின்னர், சட்டமா அதிபர் சார்பில் வழக்கை வழிநடத்திய ஒஸ்வால்ட் லக்ஷ்மன் பெரேரா, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க எத்தனையோ சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும், கடந்த 10-15 ஆண்டுகளில் குற்றச் செயல்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, இவற்றின் பிடியில் சிக்குபவர்களின் எண்ணிக்கை, அசுர பலத்தாலும், மாந்திரீகத்தாலும் நோய்களைக் குணப்படுத்தலாம் என்று மக்களை ஏமாற்றித் தங்கள் தாழ்ந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அயோக்கியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மக்களை ஏமாற்றி, இயற்கைக்கு மாறான பாலியல் ஆசைகளை நிறைவேற்ற முயலும் இது போன்றவர்களை மற்றவர்களும் பாடம் படிக்கும் வகையில் தண்டிக்க வேண்டும். இவ்வாறான பிரதிவாதிகளை நம்பியவர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கையினால் இளம் பெண்ணொருவரின் வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத சேதம் ஏற்பட்டுள்ளது. சில சமயம் ஏமாற்றியும், சில சமயங்களில் தாயை குணப்படுத்த தாம் உறவாட வேண்டுமென்றும், அதை வெளியில் சொன்னால் தாயார் இறந்துவிடுவார் என்று மிரட்டியும் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார். அத்தகையவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதிட்ட சட்டத்தரணி, குற்றம் செய்தவர் 27 வயது திருமணமாகாத இளைஞராக இருந்த போது குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அவருக்கு இப்போது 38 வயதாகிறது. அவரது வயதான தாயை கவனித்துக் கொள்ள வேண்டியவர் என்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கோரினார்.
எனினும், இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, ஒவ்வொரு குற்றத்துக்கும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வீதம், 60 வருட சிறை தண்டனை விதித்தார். அதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றத்தினால் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட யுவதிக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட மாட்டாது என உயர் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலாலே சுட்டிக்காட்டினார்.