பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கற்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகரையே எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான் அயோனா விமலரத்ன நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய போது, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் புத்தளம் நீதிமன்றில் முன்னிலையாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றைய தினம்(06) மீண்டும் புத்தளம் நீதிமன்றில் முன்னிலையானார்.
இதன்போது , சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொண்ட குளியாப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹேஷ் குமாரசிங்க, சம்பவம் தொடர்பில் முன்னெடுத்த விசாரணைகளின் உண்மைத் தன்மைகளை புத்தளம் நீதிமன்றில் அறிக்கை செய்தார்.
இதன்போது, இருதரப்பு விவாதங்களையும் கருத்திற்கொண்ட நீதவான், பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முறைப்பாட்டாளரை அச்சுறுத்தியமையை தொடர்பில் அவதானம் செலுத்தியதுடன் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.