தாரகி என்று உலகளவில் பேசப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தொழில் சார் ஊடக சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இன்று (29.04.2023) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் பல ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டதுடன் ஊடகவியலாளர் தாரகி சிவராமின் படத்திற்கு விளக்கு ஏற்றியும், மலர்தூபியும் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு ஊடக மையத்தின் தலைவர் திரு.கிருஷ்ணா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ஊடகவியலாளர் தாரகி சிவராமைப் போன்று தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் பலர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் நீதியான விசாரணையை ஒரு விஷேட குழுவினை அமைத்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்திருந்தார். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான ஊடக அறிக்கையொன்றும் இதன்போது வாசிக்கப்பட்டது. மேலும் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.