போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கோபா குழுவின் தலைவராகவும், கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருகையில்,
பாராளுமன்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது கூட்டம் நேற்று (07) இடம்பெற்ற போதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்போது, லசந்த அழகியவண்ணவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் வழிமொழிந்தார்.
அதுசமயம் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் கோப் குழு முதல்தடவையாக நேற்று (07) கூடியபோதே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்போது தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தனவின் பெயரும் காமினி வலேபொடவின் பெயரும் முன்மொழியப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன அதனை வழிமொழிந்தார்.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரோஹித அபேகுணவர்தன மேலதிக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார்.