வெடுக்குநாறி ஆலய பகுதிகளில் தற்போது பொங்கலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஆலய வளாகத்தை பொலிஸாரும் தொல்பொருள் திணைக்களத்தினுடைய அதிகாரிகளும் கண்கானித்து வருகின்றனர்.
குறிப்பாக ஆலய வளாகத்திற்குள் இரண்டு தரப்பினரையும் பொலிஸார் அனுமதித்துள்ளதோடு அந்நேரத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டால் இரண்டு தரப்பினரையும் கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.
இது மட்டுமன்றி ஆலய வளாகத்திற்குள் தண்ணீரை கொண்டுவர பொலிஸார் தடைசெய்துள்ளனர். இதனால் ஆலயத்தில் அன்னதானம் வழங்கும் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் , சிவஞானம் சிறீதரன் மற்றும் வேலன் சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவில் மகா சிவராத்திரி பூசை ஏற்பாடுகளுக்கு சென்ற பூசகர் சிவத்திரு மதிமுகராசாவை கைது செய்தமை சைவத்தமிழர்களின் அடிப்படை வழிபாட்டுரிமையை பறிக்கும் செயல் என அகில இலங்கை சைவ மகாசபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகளை நடத்தக்கூடாது என பௌத்த பிக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் இலங்கையில் பௌத்த விகாரைகளுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
மேலும், இவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகமாக நடைபெறுகின்றது.
இவ்வாறான செயற்படுகளுக்கு காரணம் அப்பாவி தமிழ் மக்கள் அல்ல. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்ற தமிழ்க் கட்சிகளின் அரசியல்வாதிகளே இதற்கு காரணம்.
அவர்கள் அப்பாவி தமிழ் மக்கள் மனதில் மதவாதத்தை தூண்டி அவர்களை தங்கள் அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்துகிறார்கள்.
அவர்களை பௌத்த விகாரைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வைக்கிறார்கள்.
எனவே, வவுனியாவின் வடுன்னாகலையில் பௌத்த விகாரைக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்தை உடனே தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும், வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகளை நடத்தக்கூடாது எனவும் நான் கோரிக்கை விடுக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.