இலத்திரனியல் சிகரெட்டுகள் (e-cigarette) இலங்கையில் குறிப்பாக கிராமப் புறங்களில் அச்சுறுத்தலாக, மிக வேகமாக பரவி வருவதாக கலால் திணைக்களத்தின் கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்தார்.
கம்பஹா கலால் திணைக்களத்தின் ஜா-எல விசேட கலால் சுற்றிவளைப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட் கையிருப்பை சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா மற்றும் பாணந்துறை போன்ற இலங்கையின் முக்கிய நகரங்களை மையமாகக் கொண்ட புறநகர்ப் பகுதிகளில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களினால் தற்போது இ-சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுவது விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
தற்போது இந்த சிகரெட்டு பாவனை படிப்படியாக இலங்கையின் தொலைதூர பகுதிகளுக்கும் பரவி வருகிறது. உதாரணமாக இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் இவ்வாறான இலத்திரனியல் சிகரெட்டை தனது பாடசாலைக்குள் கொண்டு சென்றுள்ள சம்பவமு் அண்மையில் பதிவானதாகவும் அவர் கூறினார்.