நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள பௌத்த கொள்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த முயற்சிக்கிறார். புத்தகம் எழுதுவது பயனற்றது. நாட்டு மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள் என்பதையும்,உயிரச்சுறுத்தல் ஏற்பட்ட போது நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நான் முன்னிலையாகியதையும் கோட்டாபய ராஜபக்ஷ மறந்து விட கூடாது என தேசிய பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டியவில் திங்கட்கிழமை (11) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள புத்தகத்தில் அவரது சிங்கள பௌத்த இருப்பை இல்லாதொழிக்க நான் முன்னிலையில் இருந்து செயற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் என்பனவற்றால் தான் அவரது சிங்கள பௌத்த உறுதிப்பாடு இல்லாமல் போனது.
2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொறுப்புக்கூற வேண்டும்.பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச மத்தியில் எவ்வித சதிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டிய கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள பௌத்தத்தை மீண்டும் தீவிரப்படுத்த முயற்சிக்கிறார். நாட்டு மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள். ஆகவே புத்தகம் எழுதுவது பயனற்றது. தன்னை தெரிவு செய்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாதற்கு கோட்டாபய ராஜபக்ஷ அந்த புத்தகத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். உண்மையில் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டபய ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்க வேண்டும்.
அரகலயவின் போது கோட்டாபய ராஜபக்ஷ தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள நாட்டை விட்டு வெளியேறும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நாட்டை விட்டுச் வெளியேறுவதற்கு நான் முன்னிலையில் இருந்து செயற்பட்டேன் என்பதை அவரது பிரத்தியேக பணியாளர்கள் நன்கு அறிவார்கள்.கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அவரது முறையற்ற நிர்வாகத்துக்கே எதிர்ப்பு தெரிவித்தோம் என்றார்.