மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக சேவைகள் இன்று திங்கட்கிழமை (18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் கடமை புரியும் கதிர் வீச்சு சிகிச்சையாளர்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக சேவைக்கால கொடுப்பனவை வைத்தியசாலை நிருவாகம் தமக்கு வழங்குவதில்லை எனத் தெரிவித்து மேலதிக சேவைகளை இடைநிறுத்தியுள்ளனர்.
இதே பதவி நிலையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு ஏனைய வைத்தியசாலையில் இக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் தமக்கு மாத்திரம் வழங்கப்படுவதில்லை என கதிர் வீச்சு சிகிச்சையாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் ஏனைய சில மாவட்டங்களிலிருந்து சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடுப்பவை வழங்காமை தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு தாம் அறிவித்ததற்கமைவாக, இந்த கொடுப்பனவை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும் அக்கொடுப்பனவு கதிர் வீச்சு சிகிச்சையாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை என கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.