தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் கைசாத்திடப்பட்டது.
20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளைத் தெரிவு செய்து தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு அவசியமான நவீன வகுப்பறைகளையும தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்குவதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

அதன்படி கல்விச் செயற்பாடுகளை தொழில்நுட்ப முறையில் முன்னெடுப்பதற்கான உதவிகளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் குழுவொன்று வழங்கவுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் முன்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம், மைக்ரோசொப்ட் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
இந்த வேலைத்திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலிருந்து முழுமையாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சுட்டிக்காட்டினார்.