கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (22) வெள்ளிக்கிழமை விசேட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ரமழான் மாதம் தொடங்கி 11 நாட்கள் நிறைவடைந்துள்ளதுடன் ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் கிழக்கில் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்றைய இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்குபற்றினர்.
அத்தோடு குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா,நாடாளுமன்ற உறுப்பினர்களான எச். எம். எம். ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா,முஷாரப் முதுநபீன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
பள்ளிவாசல் சம்மேளனம், வர்த்தக சமமேளனம்,ஜம்மியத் துல் உலமா காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அமைச்சர் அலி சப்ரி மற்றும் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் ஆகியோருக்கு அல்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
புனித றமழான் மாதத்தை முன்னிட்டு அதிபரின் காசா குழந்தைகள் நிதியத்திற்கு 5 இலட்சம் ரூபாய் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.