இலங்கையின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலங்களில் இலங்கை ஆசிரியர் சேவையின் 3-(அ) தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைக்குத் தகைமை பெற்ற விண்ணப்பதாரர்களின் நேர்முகப் பரீட்சைத் திகதி, நேரம், இடம் மற்றும் சபை இலக்கம் உள்ளிட்ட விபரங்கள் 2026 ஒக்டோபர் 30 முதல் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், நேர்முகப் பரீட்சைக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் மாதிரிப் படிவங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.
நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி முதல் விண்ணப்பதாரர்களின் முகவரிகளுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தகைமை பெற்ற விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தல்களைப் பரிசீலித்து, உரிய ஆவணங்களுடன் தமக்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் நேர்முகப் பரீட்சைக்குச் சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








