2027ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டு வரையான மூன்று வருட காலப்பகுதியில் சுமார் 13,000 தாதிய உத்தியோகத்தர்களை புதிதாக ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு மாணவர் தாதியர் குழுவைச் சேர்ந்த 2,819 தாதிய பயிலுநர்களுக்கு தரம் III தாதிய உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு அலரி மாளிகையில் இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
நாட்டின் வைத்தியசாலைகளில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, 2017ஆம் ஆண்டு முதல் நிரப்பப்படாமல் உள்ள தாதிய சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட 2,819 தாதிய உத்தியோகத்தர்களும், 2023ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் உள்ள 16 தாதிய பயிற்சிக் கல்லூரிகளில் இணைந்து மூன்று வருட உயர் டிப்ளோமா கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களாவர்.
இவர்கள் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.
இதனுடன், வைத்தியசாலை சேவையின் தரம் I தாதிய உத்தியோகத்தர்கள் 76 பேருக்கு விசேட தரத்திற்கான பதவி உயர்வுக் கடிதங்களும் ஜனாதிபதி தலைமையில் வழங்கப்பட்டுள்ளன.







